Wednesday, July 9, 2014

உங்களில் மிகவும் சிறந்தவர் நற்குணமுடையவரே:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

யா அல்லாஹ்! எங்களை நற்குணங்கள் கொண்டவர்களாக ஆக்கி வைப்பாயாக....
இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க சொல்லவில்லை தன் குணங்களையும் நற்குணங்களால் அழகாக்கிகொள்ளக் கட்டளையிருகிறது.
உங்களில் மிகவும் சிறந்தவர் நற்குணமுடையவரே: -

முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, ‘அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை’ என்று கூறிவிட்டு, ‘நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் கூறினார்கள். அறிவிப்பவர் :மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்), ஆதாரம் : புகாரி.

கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! சாபமிடாதீர்கள்!

நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட ‘அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்’ என்றே கூறுவார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்குர்ஆன் 67:2) என்று இறைவன் கூறுகிறான்.

நபி (ஸல்) அவர்களும் “நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)

இன்று யாராவது தவறு செய்தால் என்ன சொல்கிறோம் என்று யோசிக்காமல் தீயவார்த்தைகளுக்கு தன் நாவை பயன்படுத்தி திட்டுகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது வாய்மூடி மவுனமாயிருங்கள்”. (ஆதாரம்-புகாரி)

ஒவ்வொரு நல்ல வார்த்தையும் தர்மம் ஆகும், என்று நபியவர்கள் நவின்றார்கள் (ஆதாரம்-புகாரி)

நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு சொன்னதோடு நின்று விடாமல் தானும் அவ்வாறே நடந்துள்ளார்கள்.

ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது, அவர்களுடைய வாழ்க்கை குர்ஆன் ஆகவே இருந்தது என்றார்கள்.

இவ்வாறு நற்குணங்களை இயற்கையாக கொண்ட நபி (ஸல்) அவர்களே அதற்காக இறைவனிடம் பிராத்தித்துள்ளார்கள்.

இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் “என்னுடைய இரட்சகனே! என்னை அழகாக படைத்ததைப் போன்றே என்னுடைய ஒழுக்கத்தையும் அழகுப்படுத்துவாயாக” என்று பிராத்தித்தார்கள். (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)

நற்குணத்தோடு இருக்கும் மனிதர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பரிசைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் “நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாக இருக்காது” என்றார்கள் (ஆதாரம்: திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ உமாமா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு மனிதன் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்து விடும்போது அம்மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டைப் பெற்றுத்தர நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கை விட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை பெற்றுத் தர நான் பொறுப்பேற்கின்றேன் தன் குணங்களை சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவர்க்கத்தில் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தர பொறுப்பேற்கின்றேன் (ஆதாரம்: அபுதாவூத்).

இறைவன் அளித்த அருட்கொடையான நாவை நல்வழியில் பயன்படுத்துவோரே வெற்றியாளர்கள் என்று இறைவனும் கூறிகிறான்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்கள் அவர்கள் எத்தகையவரென்றால் அவர்கள் வீணான பேச்சு செயல் ஆகியவற்றை விட்டு விலகியிருப்பார்கள். இத்தகையோர் தாம் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள் இவர்கள் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை அனந்தரம் கொண்டு அதில் நிலையாக தங்கியிருப்பார்கள் (அல்குர்ஆன் 23:1-11)

மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை ஒவ்வொரு அசைவிலும் அவனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இறைவனும் அவனின் தூதரும் கூறி உள்ளார்கள்.

“இறைவனை தவிர வேறு கடவுள் இல்லை அவனின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்” என்று வெறும் வாயளவில் கூறிக் கொள்வதால் மட்டும் முஸ்லிம் (இறைநம்பிக்கையாளர்) ஆகிவிட முடியாது.
— 

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே