Sunday, July 13, 2014

இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரலி) வாழ்க்கைவரலாறு

ஹூ இரண்டாம் கலீஃபா உமர் பின்
-----------------------------------
கத்தாப் (ரலி) வாழ்க்கை
-----------------------------
வரலாறு :
------------


பாகம் : 02. ( நேற்றைய தொடர்ச்சி)
-------------

உமர் (ரலி) அவர்களும் இஸ்லாமும் :
-----------------------------

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை மக்காவில் ஆரம்பித்த பொழுது மக்கமா நகரமே இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்த எதிர்ப்பில் இணைந்து கொண்ட உமர் அவர்கள் தனது கடவுள்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பிரச்சாரம் அவமதித்து விட்டதாகக் கருதினார். எனவே குறைஷிகளிடமிருந்து எதிர்ப்புகள் உருவான பொழுது அதில் முன்னணியில் இருந்து செயல்பட ஆரம்பித்தார் உமர் அவர்கள்.
ஒரு நாள் உமர் அவர்கள் கஃபாவின் அருகில் சென்று கொண்டிருந்த பொழுதுää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஃபாவில் இருந்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திருமறைக் குர்ஆனில் இருந்து சில வரிகளை ஓதிக் கொண்டிருந்ததை உமர் அவர்கள் செவிமடுத்தார்கள்.

''இது இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதமாகும்.

இது கவிஞனின் வார்த்தையுமல்ல

இருந்தும் இந்த மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை"".

உமர் அவர்கள் அந்த வசனத்தைச் செவி மடுத்து விட்டு ஓ..! இது நிச்சயமாக கவிஞனின் வார்த்தை தான் என்று எண்ணிக் கொண்டார்.

பின்பு வசனம் தொடர்ந்தது ஓ..! இது நிச்சயமாக ஜோதிடனின் வார்த்தைதான் என்று எண்ணினார்.

''இது எந்த ஜோதிடனின் வார்த்தையுமல்ல

இது (இறைவனிடமிருந்து) ஜிப்ரீல் (அலை) மூலமாக அருளப்பட்டது""

என்று இறைத்தூதர் (ஸல்) ஓதி முடித்தார்கள்.

இந்த வசனத்தைக் கேட்ட உமர் அவர்கள் சற்று நிதானமாகச் சிந்திக்க ஆரம்பித்து சற்று நேரம் அங்கேயே நின்று விட்டார்கள். அப்பொழுது முதன் முதலில் முஹம்மது (ஸல்) அவர்களிடம் சத்தியம் இருக்கின்றது என்று எண்ணங் கொள்ள ஆரம்பித்தார்கள்.

எனினும் இந்த எண்ணம் மிக நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த எண்ணத்தைத் துடைத்தெறிந்து விட்டு மீண்டும் இஸ்லாத்தை எதிர்ப்பதில் மும்முறம் காட்ட ஆரம்பித்தார். இஸ்லாத்திற்கு எதிராக குறைஷிகள் நடத்திய சதி ஆலோசனைக் கூட்டங்களுக்குச் சென்று வர ஆரம்பித்தார்.

அப்பொழுது இஸ்லாம் என்ற விஷம் குறைஷிகளுக்குள் மிக வேகமாகப் பரவி வருகின்றது விஷத்தை முறியடிக்க வேண்டுமெனில் அது வெளிவரும் வாசலை அடைத்தாக வேண்டும் அதற்கு ஒரே வழி முஹம்மது (ஸல்) அவர்களைக் கொல்ல வேண்டும் என்று அந்த சதி ஆலோசனையில் முடிவாகியது.

நானே அவரைக் கொலை செய்ய முன் வருகின்றேன் என்று முன் வந்த உமர் அவர்கள் இதன் மூலம் எனது மூதாதையர்களின் மார்க்கத்திற்கு நேர்ந்த களங்கத்தைத் துடைக்கப் போகின்றேன் என்று சூளுரைத்தார்கள்.

உமரின் கொலைவெறி:
----------------------------

ஒருநாள் (கி.பி.616) கடுமையான கோடையின் உச்சி வெயில். அந்தப் பாலை வெயிலில் உக்கிரத்தை விட உமரின் உள்ளத்தில் ஒரு எரிமலை வெடித்துக் கிளம்பிக் கொண்டிருந்தது. தனது உடை வாளை உருவிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய உமரது உள்ளத்தில் முஹம்மது (ஸல்) அவர்களைக் கொலை செய்து விட வேண்டும் என்ற எண்ணம் நெருப்பாய் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.

அவர் சென்று கொண்டிருந்த தெரு வழியாக அவரது நண்பர் நுஐம் பின் அப்துல்லா (ரலி) அவர்கள் வருகின்றார்கள். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை உமர் அறிந்திருக்கவில்லை.

உமரைச் சந்தித்த நுஐம் (ரலி) அவர்கள் உமரின் முகத்தில் தெறித்துக் கொண்டிருந்த கோபக் கனலைப் பார்த்து விட்டு

என்ன உமரே..! எங்கே இவ்வளவு வேகம்..!

முஹம்மதைக் கொன்று விட்டு கஃபாவில் உள்ள நமது கடவுள்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கப் போகின்றேன் என்று கொந்தளித்தார் உமர் பதிலுக்கு..!

உமரே..! எச்சரிக்கை..! முஹம்மதை நீர் கொலை செய்தால் பனூ ஹாஸிம் கோத்திரத்தாரின் கொடிய கோபப் பார்வைக்கு நீர் ஆளாக நேரிடும் ஜாக்கிரதை..! உம்முடைய நன்மைக்காகத் தான் நான் சொல்கின்றேன் கேட்டுக் கொள்வீராக..! என்றார் நுஐம் (ரலி) அவர்கள்.

நீர் சொல்வதைப் பார்த்தால் நீரும் முஸ்லிமாகி விட்டது போலல்லவா தெரிகின்றது என்றார் உமர் அவர்கள்

நான் முஸ்லிமானது ஆகாதது...! இருக்கட்டும். என்னைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். நீர் உமது சகோதரியையும் உமது மைத்துனரையும் போய் பார்..! அவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களாகி விட்டார்கள். இப்பொழுது அவர்கள் திருமறைக்குர்ஆனை வாசித்துக் கொண்டு கூட இருக்கலாம் அவர்களைப் போய் கவனியும் என்றார் நுஐம் (ரலி) அவர்கள்.

என்ன..? எனது சகோதரியும் மைத்துனரும் முஸ்லிம்களாகி விட்டார்களா? என்று உறைந்து போய் நின்ற உமர் அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கிச் சென்ற தனது பயணத்தை மாற்றிää தனது தங்கை ஃபாத்திமாவையும் அவரது கணவர் ஸயீத் பின் ஜைத் (ரலி) அவர்களின் வீடு நோக்கிச் சென்றார்கள். உமர் தனது தங்கையான ஃபாத்திமாவின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்கள். தனது தங்கையும் தங்கையின் கணவரும் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டதை கனவிலும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. இந்தச் செய்தியில் உண்மையிருக்காது. இதனை நான் நம்ப மாட்டேன் எனினும் இந்தச்செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவரது மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது.

உமர் அவர்கள் தனது தங்கையின் வீட்டு வாசலை அடைந்த பொழுது அங்கே அவரது தங்கை ஃபாத்திமா (ரலி) அவர்களும் அவரது கணவர் ஸயீத் பின் ஜைத் (ரலி) அவர்களும் குர்ஆனில் இருந்து சில வசனங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். சகோதரனைப் பார்த்து விட்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் தனது கையிலிருந்து குர்ஆன் எழுதப்பட்டிருந்த ஓலையை மறைத்து விட்டு அண்ணனை வரவேற்பதற்காக எழுந்தார் புன்னகையுடன் உமரை வரவேற்றார். ஆனால் உமருடைய முகத்திலோ இருள் மண்டிக் கிடந்தது.

எதனை வாசித்துக் கொண்டிருந்தீர்கள்..! உமர் கேட்டார்.

ஒன்றுமில்லை..! ஃபாத்திமா (ரலி) அவர்களிடமிருந்து பதிலாக வந்தது.

தனது மைத்துனரின் சட்டையின் கழுத்துப் பகுதியை இறுக்கிப்பிடித்த உமர் உமது மூதாதையர்களது மார்க்கத்தை வெறுத்து விட்டீர்களோ..! என்றார்.

நாங்கள் சத்தியத்திற்காக அசத்தியத்தைத் தூர எறிந்தோம் என்றார் அஞ்சாத குரலில் ஸயீத் (ரலி) அவர்கள்.

இந்த வார்த்தையைக் கேட்ட உமர் ன் கண்களில் கோபக் கனல் தெறித்தது மைத்துனரை நையப் புடைக்க ஆரம்பித்தார். தனது கணவரை விடுவிப்பதற்காக இடையில் புகுந்த ஃபாத்திமா (ரலி) அவர்கள்

உமரே..! எனது கணவரை விட்டு விடும்..!

நீர் என்ன கூற வந்தீரோ அதனை என்னிடமே கூறுங்கள் அதனை விட்டு விட்டு எனது கணவர் மீது கை வைப்பது சரியில்லை..! என்று தனது சகோதரரை எச்சரித்தார் ஃபாத்திமா (ரலி) அவர்கள்.

நீங்கள் முஸ்லிம்களாகி விட்டீர்களாமே..! உண்மையா?

ஆம்..! நாங்கள் முஸ்லிம்களாகி விட்டோம்.

இதற்காக நீர் எங்களைக் கொலை செய்ய வந்திருப்பீரென்றால்ää எங்களைக் கொன்று விடுங்கள். உங்களது மிரட்டலுக்கெல்லாம் பயந்து இஸ்லாத்தை நாங்கள் விட்டு விட மாட்டோம் என்று உறுதியாகக் கூறினார்.

இப்பொழுது உமர் சற்று நிதானத்திற்கு வந்தவராய்..! சரி..! நீங்கள் வாசித்த அந்த ஓலையை என்னிடம் காண்பிக்கக் கூடாதா? நான் பார்க்க வேண்டும் என்றார்.

நீங்கள் தூய்மையானவராக ஆகும் வரைக்கும் இந்த புனிதக்குர்ஆனை நீங்கள் தொட முடியாது. முதலில் சென்று உங்களை சுத்தம் செய்துக் கொண்டு வாருங்கள் என்றார் ஃபாத்திமா (ரலி) அவர்கள்.

தன்னை சுத்தம் செய்து திரும்பிய உமரிடம் அந்தத் திருமறையின் பாகங்கள் கொடுக்கப்பட்டன. அதன் பக்கங்கள் இவ்வாறு ஆரம்பமாகின. உமர் வாசிக்க ஆரம்பித்தார் :

சூரத்துத் தாஹா.
---------------------

(நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.

(அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).

பூமியையும் உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.

அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.

வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும் மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.

(நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான். அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை.

அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. (தாஹா : 1-8)

திரும்பி.. திரும்பி..! ஓதிக் கொண்டெ இருந்தார். இந்த வசனங்கள் என்னை நோக்கி உரையாடுவது போலல்லவா இருக்கின்றது. உமர் என்ற இந்த தனிப்பட்ட மனிதனை நோக்கி அல்லவா இதன் வசனங்கள் உரையாடுகின்றன. என்ன அற்புதம். தாஹா என்ற பெயர் கூட என்னை நோக்கி விளிப்பதாகவே உணர்கின்றேனே..!

சத்தியத்தின் தாக்குதலால் அசத்தியத்தின் கதவுகள் தனது இதயதத்தில் மூடு விழா நடத்திக் கொண்டிருப்பதை உணர ஆரம்பித்தார். சற்று நிலைகுலைந்த நிலையில்...! உமரே..! நீர் எவ்வளவு நாட்கள் தான் சத்தியத்தின் வெளிச்சப் பாதையை விட்டு விட்டு அசத்தியத்தின் அந்தகார இருளில் தவித்துக் கொண்டிருக்கப் போகின்றாய் என்ற கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள ஆரம்பித்த உமர் அவர்களிடம் இன்னும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள உமக்கு நேரம் வரவில்லையா? என்று அவரது உள்மனம் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது.

புயலாய் வந்த கோபம் தென்றலாகக் கரையைக் கடந்தது.

இனி ஒரு கணமும் நான் தாமதிக்கப் போவதில்லை...!

சத்தியத்தின் சுவடுகளை நான் தரிசிக்க வேண்டும்.

தனது தங்கையின் பக்கமும் மைத்துனரின் பக்கமும் திரும்பிய உமர்

இஸ்லாத்தின் பரம விரோதியாக இங்கே நுழைந்தவன் நான்...!

ஆனால் இப்பொழுதோ

இஸ்லாத்தின் உற்ற நண்பனாக உங்கள் முன் நிற்கிறேன்.

எனது கையில் இருக்கும் இந்த உடைவாள்

முஹம்மதின் கழுத்தைத் துண்டிக்கத் தயாரானது.

என்ன மாற்றம்..!

அந்த முத்து முஹம்மதின் (ஸல்) கரங்களால் நான்
சத்தியத்திற்குச் சான்று பகரச் சென்று கொண்டிருக்கின்றேன் என்றார் உமர்.

உணர்ச்சியின் விழிம்பில் உரத்து முழங்கினார்...! அல்லாஹூ அக்பர்..! என்று ஃபாத்திமா அவர்கள்.

ஆம்..! படைத்தவனின் விதியின் எழுத்துக்கள் இல்லாதிருந்தால் வெளிச்சப் புள்ளிகள் கூட பலருக்கு இருட்டுலகமாகத் தானே ஆகி விடும்.

விட்டில் பூச்சியாய் எரிநெருப்பில் விழக் காத்திருந்த சகோதரனுக்கு விடியலைக் காட்டுவது இறைவனையன்றி வேறு யாரால் முடியும்..! உரத்து முழங்கினார். இறைவா! நீ மிகப் பெரியவன்..!
அல்லாஹூ அக்பர்..! என்று......




Ahmed Buhari

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே