Sunday, July 13, 2014

குழந்தைகளின் சிந்தனைப் போக்கை நிர்ணயிப்பதில் அவர்களை நாம்......

குழந்தைகளின் சிந்தனைப் போக்கை நிர்ணயிப்பதில் அவர்களை நாம் அணுகும் பயிற்றுவிக்கும் விதம் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றது. வன்முறை மனப்பாங்கு குழந்தைகளின் மனங்களில் ஆழம் பெற்றுவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோராகிய நமக்கு உள்ளது.
முந்தாநாள் அல்லது அதற்கு முதல்நாள் இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்கள் தாக்கப்பட்டார்கள் என்பதான ஒரு செய்தியைக் கேட்டு, "வெரி குட் நிவ்ஸ்" என்று துள்ளிக் குதித்தான் மகன் ராஷித். நான் அவனை அருகே அழைத்தேன். அவனிடம்,

"மகனே! இறப்பது எவ்வளவு மோசமான நபர்களாக இருந்தாலும், இன்னொருவரின் சாவில் மகிழ்ச்சி கொள்ளும் அளவுக்கு எங்கள் உள்ளங்கள் இறுகிப்போய்விடக் கூடாது. ஏன் என்றால், சாவு என்பதும் இழப்பு என்பதும் மிகவும் வேதனையானது; மோசமானது. எல்லா உயிர்களையும் அல்லாஹ்வே படைத்தான். அவை அனைத்தையும் நேசிக்கவே எங்களுக்குக் கட்டளை இட்டுள்ளான். கார்ட்டூன்களில் ஒருவரை ஒருவர் சுடுவதுபோல் அல்ல, நிஜத்தில் நடப்பது. கார்ட்டூன் என்பது பொய். நிஜத்தில் அப்படி அல்ல. செத்துப் போனால் செத்துப் போனதுதான். அந்தச் சாவினால் அவர்களின் குடும்பம் அனாதரவாகி விடும். கஷ்டப்படும். ஆகவே, சாவது யாராக இருந்தாலும் அதைக் கண்டு மகிழ்ந்து கொண்டாடுவது நல்ல பண்பு அல்ல" என்றேன்.
"அவங்க மட்டும் பலஸ்தீன் குழந்தைகளைக் கொல்றாங்களே!" என்றான் கோபம் சற்று தணிந்த ஆதங்கக் குரலில். இப்போது என் கணவர் சொன்னார்:
"மகனே! இஸ்ரேலியர்கள் செய்வது தவறுதான். அதற்கான கூலியை அவர்கள் அடைவார்கள். பலஸ்தீன் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்துவதும் சரிதான். ஆனால், நாங்கள் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு போரில் தவிர்க்க முடியாமலோ வேண்டுமென்றோ உயிர்கள் கொல்லப்படுகின்றன. ஆனால், உம்மா சொல்வது போல, அதைக் கண்டு நாங்க மகிழ்ச்சி அடைவது நல்ல பண்பு அல்ல. அதேநேரம், இதுபோல் யுத்தங்களும் மனிதச் சாவுகளும் ஏற்படாமல் இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியுமாக இருந்தால், அதுதான் மிகவும் நல்லது. நாம் அதற்கான வழிவகைகளைத் தேட முயற்சி செய்ய வேண்டும். அதுதான் சரியான தீர்வாக இருக்கும்"
"ஐயேம் ஸொரி, நான் அப்படி சந்தோஷப்பட்டதுக்கு... இந்தச் சண்டைகள் இல்லாமல் போனால் மிச்சம் நல்லது" என்றுவிட்டு எழுந்து விளையாடப் போனான்.



Abdul Haq Lareena

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே