Sunday, July 13, 2014

இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரலி) வாழ்க்கை வரலாறு : பாகம் : 05

இரண்டாம் கலீஃபா உமர் பின்
———————————————————
கத்தாப் (ரலி) வாழ்க்கை
————————————————
வரலாறு :
———————
பாகம் : 05
———————

முன்னுரை :
————————
இங்கு உமர் (ரலி) அவர்களின்
வரலாற்றை பத்ருப் போரின்றி எழுதுதல் இயலாது... இன்னும் இஸ்லாத்தின் அஸ்திவாரம் இறைவன் உதவியால் நிலைபெற்றதில் பத்ருப் போருக்கு சரித்திரத்தில் மிக முக்கிய பங்குண்டு எனவே முடிந்த அளவு அதனை முழுமையாக பதிவிட இறையிடம் உதவி கோரியவனாக தொடங்குகிறேன்.

பத்ருப் போரின் காரணிகள்:
——————————————————
மக்கத்து குரைஷிகளால் சொல்லொனா துயரம் அடைந்து, மக்காவை விட்டு, மதீனாவிற்கும், அபிசீனியாவிற்கும் இறைநம்பிக்கையாளர்கள் ஹிஜ்ரத் செய்கிறார்கள்.
இந்நிலையில் மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் இந்நிகழ்வுகளை தடுப்பதற்க்காகவும் இஸ்லாத்தை முளையிலேயே வெட்டி வீசி விட வேண்டியுமாய் நபிகள்(ஸல்) அவர்களை கொலை செய்ய தீர்மானித்தவர்களாய் மக்காவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஓர் ஆள் என அனைவரும் ஓர் இரவு அது விடியும் பொழுது அண்ணலாரை கொல்ல மாநபி (ஸல்) அவர்கள் வீட்டினை முற்றுகை இடுகின்றனர்.

பொழுது புலர்கின்றது முஷ்ரிக்கீன்கள் அனைவரும் தங்கள் குரூரத்தை நிறைவேற்ற எத்தனிக்கும் சமயம் அண்ணலார் அவர்களும் ஹிஜ்ரத் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டார்கள் என்ற செய்தி மக்கத்து குரைஷிகளுக்கு மிகுந்த ஆத்திரத்தை உண்டு பண்ணுகிறது.

இந்நிலையில் பல இறைநம்பிக்கையாளர்கள், தான் சம்பாதித்த செல்வங்களையும், வீட்டையும் அப்படியே விட்டு விட்டு ஹிஜ்ரத் சென்றார்கள். இப்போது, இறைமறுப்பாளர்களின் கோபம் ஹிஜ்ரத் சென்றவர்கள் விட்டு சென்ற சொத்து, செல்வம், மற்றும் வீடு ஆகியவை பக்கம் திரும்பியதன் விளைவு. அவைகளை அவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். பல வீடுகளை அழிக்கிறார்கள், ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்.

மக்காவில் உள்ள தங்கள் செல்வங்களை எல்லாம் மக்கத்து காபிர்கள் கொள்ளை அடித்துவிட்டார்கள் என்ற செய்தி மதினாவில் நபி(ஸல்) அவர்களுடன் உள்ள இறை
நம்பிக்கையாளர்களுக்கு தெரியவருகிறது.

இவ்வாறான காலகட்டத்தில் இந்த சம்பவங்கள் நிகழும் ஆரம்ப நிலையில் அபுசுப்யான் தலமையில் சென்ற மிகப்பெரிய வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து மக்காவை நோக்கி திரும்பிக் கொண்டு இருக்கிறது என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு கிடைக்கிறது.

இந்த செய்தியை குறித்து அறிந்து கொள்வதற்காக
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரலி), ஸஈது இப்னு ஜைது(ரலி) ஆகிய இருவரை மதீனாவின் வடக்கு திசையின் பக்கம் அனுப்பினார்கள். இவ்விருவரும் ஹவ்ரா என்ற இடத்தை அடைந்து அங்கு தங்கி இருந்தனர். அபுசுப்யான் வியாபாரக்கூட்டத்துடன் அவ்விடத்தை அடைந்த போது, அவ்விருவரும் மதினாவிற்கு திரும்பிவந்தவர்களாய்...

அபுசுப்யான் தலமையிலான வியாபாரக்கூட்டத்தில் குரைஷித்தலைவர்களின் செல்வங்கள் அதிக அளவில் இருக்கின்றது எனவும் ஆயிரம் ஒட்டகங்களில் 50,000 தங்க நாணயங்களுக்கு குறையாத வியாபாரப் பொருட்களுடன். இவ்வளவு பெரிய வியாபாரக்கூட்டத்தை பாதுகாக்க 40 வீரர்கள் மட்டுமே இருக்கின்றனர் என்ற செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் கூறுகிறார்கள்.

மக்காவாசிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சேதத்தை உண்டு பண்ணுவதற்கு முஸ்லிம்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகவும் முஸ்லிம்களுக்கு அவர்கள் செல்வங்களில் இழைக்கப்பட்ட அநீதியின் காரணம் துடித்துக் கொண்டு இருக்கும் மனங்களுக்கு நீதி வழங்க எண்ணிய நபி(ஸல்) அவர்கள், ஒரு அறிவிப்பு செய்கிறார்கள். “அந்த கூட்டத்தை நோக்கி நீங்கள் புறப்பட தயாராகுங்கள்” என்று., இந்த சண்டையில் கலந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் யாரையும் வற்புறுத்தவில்லை. காரணம், பத்ருவில் ஒரு மூர்கத்தனமான போர் நிகழும் என்று அவர்கள் அப்போது எதிர்பார்க்கவில்லை.

அபுசுப்யானும் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தார். காரணம், மதீனாவின் பாதை மிகவும் ஆபத்தானது, தங்களது வாணிபக்கூட்டம் பழிவாங்கப்படலாம் என்று எண்ணி இருந்தார். அதே போல், மதினாவில் இருந்து முஹம்மது(ஸல்) அவர்கள் தலமையில் வாணிபப் பொருள்களை கைபற்றி போர் புரிய வருகிறார்கள் என்ற செய்தி அவருக்கும் கிடைக்கிறது. உடனே, ழம்ழம் இப்னு அம்ர் அல்கிஃபா என்பவருக்கு கூலி கொடுத்து மக்காவிற்கு உதவி கேட்டு அனுப்பி வைக்கிறார். அவரும், மக்கா சென்று கூக்குரலிடுகிறார்.’உதவி.. உதவி.. காப்பாற்றுங்கள்! ‘ என்று கத்துகிறார். மக்காவாசிகள் வெகுண்டு எழுகிறார்கள். போருக்கு தயாராகிறார்கள். மக்காவில் உள்ள அனைத்து பிரமுகர்களும் இதில் கலந்து கொள்ள புறப்பட்டார்கள். குரைஷியர்கள் தங்களை சுற்றியுள்ள அனைத்து அரேபியர்களையும் ஒன்று சேர்த்தனர்.

இங்கு நாம் வேறொரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இது மக்காவாசிகளின் திடீர் போர் முடிவு அல்ல. இது முன்பே திட்டமிட்ட ஒன்று.

ஷாம் நகரிலிருந்து மதினா வழியாக மக்கா செல்லும் பாதை சர்வதேச பாதையாகும்.(இது மதினாவின் எல்லைக்கு உட்பட்டது) இந்த பாதையை எப்படியும் முஹம்மது(ஸல்) அவர்கள் வழிமறிப்பார்கள், அதை கொண்டே நாம், மதினாவை தனிமை படித்திவிடலாம் என்று முன்பே ஒரு திட்டத்தை தீட்டி வைத்து இருந்தார்கள். அதன்படி,சர்வதேச எல்லையில் முஹம்மது(ஸல்) அவர்கள் வாணிபக்கூட்டத்தை வழிமறித்து போர் புரிய காத்திருக்கிறார் என்ற வதந்தியை அரபு தேசம் எங்கும் பரப்ப வேண்டும். காரணம் ஏனைய அரபு வணிகர்களுக்கும் முக்கியமான வழியாகும் இது. எனவே ஒட்டு மொத்த அரபியாவிற்கும் எதிரான குற்றமாக இதனை ஆக்கவேண்டும். இதன் மூலம் அனைத்து அரபு தேசமும் மதினாவிற்கு எதிராக போர் புரிய கிளம்புவார்கள் என்பது அவர்களின் திட்டம். அந்த திட்டமும் ஓரளவு அவர்களுக்கு பலித்தது. இதன் மூலம் மதினாவிற்கு வடக்கே நஜ்து தேசத்திலிலுள்ள பனா சுலைம் மற்றும் பனா கத்பாஃன் படைகள் மக்கா படைகளோடு சேர்ந்து கொண்டன.
‘பனபக்ர்’ என்ற கூட்டத்தார் மக்காவின் எதிரியாகத் திகழ்ந்தனர். சர்வதேச வணிகப் பாதையைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்கே தாங்கள் போரிடச் செல்வதாகவும், எனவே தாங்கள் இல்லாத அச்சமயத்தில் மக்காவைத் தாக்கிவிட வேண்டாமென இந்த வதந்தியின் மூலம் குறைஷிகள் ‘பனாபக்கர்’ கூட்டத்தினரை மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். குறைஷிகளின் சூழ்ச்சியை அறியாத அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்தார்கள்.

மக்காவின் படைகள் ‘பத்ரு’க்களம் வந்தது ஏதோ தற்செயலாக நிகழ்ந்ததென்றோ, இறைத்தூதர்(ஸல்) அவர்களால் வழிமறிக்கப்படு வோம் என்ற அச்சத்தினால் வந்ததென்றோ ஒருபோதும் கருத முடியாது. உண்மையில் அது முன் கூட்டியே திட்டமிடப்பட்ட செயலாகும்.

இப்போது ஆயிரத்து முன்னூறு பேர் கொண்ட மக்காவின் இராணுவம் பத்ர்களம் நோக்கிப் புறப்பட்டது. நஜ்து தேசத்துப் படைகளும் பத்ர் களம் நோக்கி வந்தன. திமஸ்கஸிலிருந்து திரும்பிய வணிகக்கூட்டம் நிறைய ஆயுதங்களைச் சுமந்து வந்தது. அக்கூட்டமும் மக்காவின் படையும் பத்ரில் ஒன்று கூடின. இதைத் திருக்குர்ஆனும் கூறுகிறது.

”பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கு எதிராக பத்ரில்) அல்லாஹ்வுடைய பாதையைவிட்டு மக்களைத் தடுத்தார்கள்.” (குர்ஆன் 8:47).

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே