Sunday, July 13, 2014

இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரலி) வாழ்க்கை வரலாறு : —— பாகம் : 04

இரண்டாம் கலீஃபா உமர் பின்
———————————————————
கத்தாப் (ரலி) வாழ்க்கை
————————————————
வரலாறு :
———————
பாகம் : 04
———————

மக்காவிலிருந்து மதீனாவிற்கு
———————————————————
உமர் (ரலி) ஹிஜ்ரத் பயணம் :
———————————————————

கி.பி. 622 ல் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் உச்ச கட்டத்திற்குச் சென்று விட்ட பொழுது முஸ்லிம்களை மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் - நாடு துறந்து செல்ல அனுமதித்து விட வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். எனவே அதன்படி குழு குழுவாக முஸ்லிம்கள் மக்காவை விட்டும் வெளியேறி மதீனாவை நோக்கிச் செல்லலானார்கள்.

அபூ ஸலமா பின் அஷால் (ரலி) அவர்கள் தான் முதன் முதலில் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்றவர்களாவார்கள். அவர்களைத் தொடர்ந்து பிலால் (ரலி) அம்மார் (ரலி) யாஸிர் (ரலி) போன்றவர்கள் வெளியேறினார்கள். அதன் பின் உமர் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறி மதீனாவிற்குப் பயணமானார்கள்.

மேலே நாம் குறிப்பிட்டவர்களும் இன்னும் ஏனையோர்களும் மிகவும் ரகசியமாக குறைஷிகள் அறியாத வண்ணம் மதீனாவிற்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் உமர் (ரலி) அவர்களோ மிகவும் பகிரங்கமாக அறிவிப்புச் செய்து விட்டு உங்களில் எவருக்காவது துணிவு இருக்கும்பட்சத்தில் என்னைத் தடுத்து நிறுத்திப் பாருங்கள் என்று சவால் விட்ட வண்ணம் மக்காவை விட்டு வெளியேறினார்கள். உமர் (ரலி) அவர்களுடன் பலப்பரீட்சை செய்வதற்கு அங்குள்ள குறைஷிகள் எவருக்கும் துணிவு பிறக்கவில்லை அவரைத் தடுக்கும் துணிவின்றி அவரது சவாலை ஏற்றுக் கொள்வதற்கும் எவரும் முன்வரவில்லை.

இப்னு அசாகீர் என்ற வரலாற்று ஆய்வாளார் உமர் (ரலி) அவர்களின் ஹிஜ்ரத்தை இவ்வாறு விவரிக்கின்றார் :

ரகசியமாக ஹிஜ்ரத் செய்தவர்களைத் தான் நான் பார்த்திருக்கின்றேன் ஆனால் உமர் (ரலி) அவர்களைத் தவிர பகிரங்கமாக ஹிஜ்ரத் செய்து சென்றதொரு மனிதரை நான் பார்த்ததில்லை. அவர் ஹிஜ்ரத் செய்வது என்ற முடிவெடுத்தவுடன் தனது வாளை தனது இடுப்பில் தொங்க விட்டுக் கொண்டு வில்லையும் தொங்க விட்டுக் கொண்டு அதில் அம்பையும் பூட்டி நேரே கஃபாவுக்குச் சென்றார். அங்கு உட்கார்ந்திருந்த குறைஷிகளுக்கு முன்பாகவே கஃபாவை ஏழு முறை வலம் வந்தார். இப்றாஹீம் (அலை) அவர்கள் நின்ற இடமான மகாமே இப்றாஹீமில் இரண்டு ரக்அத் தொழுதார் பின் அங்கு அமர்ந்திருந்த குறைஷிகளில் ஒவ்வொருவரிடமும் சென்று மக்காவின் வெளிப்புறப்பகுதிக்கு வந்து நான் ஹிஜ்ரத் செல்வதை உங்களில் எவராவது தடுத்துப் பார்க்கட்டும் அத்தகையவனின் முகம் புழுதி படியட்டுமாக..! அவனது தாய் அவனை இழப்பாளாக அவனது குழந்தைகள் அநாதையாக்கப்படும் அவளது மனைவி விதையாகவும் ஆக்கப்படுவளாக..! என்று கூறினார்கள். ஆனால் எவரும் அவரைத் தடுக்கும் சக்தி பெற்றிருக்கவில்லை. முன்வரவுமில்லை.

ஸஹீஹ் புகாரீயின் கூற்றுப்படி 20 முஸ்லிம்கள் உமர் (ரலி) அவர்களைத் தொடர்ந்து மதீனாவிற்கு பயணமானார்கள். உமர் (ரலி) அவர்களின் சகோதரர் ஸைத் பின் கத்தாப் (ரலி), ஸைத் பின் ஜைத் (ரலி), ஹஃப்ஸா (ரலி) அவர்களின் கணவரும் உமர் (ரலி) அவர்களின் மருமகனுமாக ஹூனைஸ் பின் ஹூதைபா (ரலி) ஆகியோர்களும் இந்தக் குழுவில் அடங்குவர். இன்னும் அப்ர் பின் சுரகா (ரலி) அப்துல்லா பின் சுரகா (ரலி) வகீத் பின் அப்துல்லா தமீமீ (ரலி) கவ்லா பின் அபீ கவ்லா (ரலி) மாலிக் பின் அபீ கல்லா (ரலி) அய்யாஷ் பின் புகைர் (ரலி) அகில் பின் புகைர் (ரலி) அமீர் பின் புகைர் (ரலி) மற்றும் காலித் பின் புகைர் (ரலி) ஆகியோரும் இந்தக் குழுவினருடன் சென்றவர்களாவார்கள்

ஆரம்ப கால மதீனா வாழ்வு :
——————————————————
உமர் (ரலி) அவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன் மதீனாவின் புறநகர்ப் பகுதியான கூஃபா வில் தங்கினார்கள். உமர் (ரலி) அவர்களுடன் மொத்தம் 20 நபர்கள் வந்திருந்தார்கள் அவர்களில் அவரது சகோதரர் ஸைத்(ரலி), மருமகன் குனைஸ் பின் ஹூதைபா (ரலி), மற்றும் வாகித் பின் அப்துல்லா அல் தமீமீ (ரலி), அய்யாஷ் (ரலி) ஆகியோரும் வந்திருந்தனர். கூபா வில் உமர் (ரலி) அவர்களும் அவர்களுடன் வந்திருந்தவர்களும் அன்ஸாரித் தோழரான ரிஃபா பின் அப்துல் முன்திர் என்ற பனூ அம்ர் கோத்திரத்தைச் சேர்ந்தவரின் இல்லத்தில் தங்கினார்கள்.

இப்பொழுது கூபா வில் உள்ள அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர் மக்காவிலிருந்து பயணிகள் வரக் கூடிய சாலையை நோக்கிய வண்ணம் கூபா வின் புறநகர்ப் பகுதியில் எதிர்பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். பல நாட்கள் காத்திருந்தும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இன்னும் வரக் காணவில்லையே என்று மக்கள் கவலை கொள்ள ஆரம்பித்தார்கள். அதிலும் உமர் (ரலி) அவர்கள் தனது உற்ற தோழரது வருகை தாமதமாவதைக் கண்டு கவலையுற்றவராக மக்காவிற்குச் சென்று நிலமை என்னவென்பதை அறிந்து வர முடிவு செய்தார்கள்.

இதற்கிடையில் ஒருநாள் பகல் வேளையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள் சகிதம் பகல் பொழுதில் மதீனாவின் புறநகர்ப் பகுதியான கூபா வை வந்தடைந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காண மக்கள் குழுமினார்கள். அந்த மதீனத்து மக்கள் ஏற்கனவே இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லையாதலால் வந்திருந்த இருவரில் யார் இறைத்தூதராக இருக்கக் கூடும் என்று மக்கள் அறிய முடியாமல் தவித்தார்கள். மக்களின் தவிப்பை அறிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது போர்வையால் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு குடை பிடித்தவர்கள் போல நகரில் நுழைய ஆரம்பித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்து விட்டதை அறிந்த உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காண விரைந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஆருயிர்த் தோழர் உமர் (ரலி) அவர்களை ஆரத் தழுவி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூபாவில் சில நாட்கள் தங்கியிருந்தார்கள் கூட்டுத் தொழுகையை அவர்களே முன்னின்று நடத்தினார்கள். பின்பு சில நாட்கள் கழித்து மதீனாவிற்குள் சென்றார்கள். உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை நிழல் போலத் தொடர்ந்து சென்றார்கள். மதீனாவில் நுழைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் புலம் பெயர்ந்து வந்த அனைவருக்கும் மதீனா மக்கள் அன்பான வரவேற்பை அளித்தார்கள். இன்னும் மதீனாவில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது வீட்டின் மாடத்தில் அமர்ந்து கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களை வரவேற்றுப் பாடல்களைப் பாடலானார்கள்.

'விதா மலைக் கணவாய்களின் ஊடேயிருந்து பௌர்ணமி நிலவு முழுமதி முகிலைக் கிழித்துக் கொண்டு எங்களுக்கு ஒளி தருவதற்காக உதயமாகிவிட்டது! இறைவனிடம் இரு கரமேந்தி இறைஞ்சுவோர் உலகில் இருக்கும்வரை (உலகம் உள்ளவரையும்) நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியது நம் மீது கடமையாகி விட்டது!"

மக்காவை விட மதீனா முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருந்தது. மக்காவில் முஸ்லிம்கள் அடக்குமுறைக்கும் அவலத்திற்கும் சித்ரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் மதீனாவிலோ பூரண வரவேற்பும் முழு மரியாதையும் கிடைத்ததோடு மண்ணின் மைந்தர்கள் போல மக்கத்து மக்கள் மதீனாவில் வலம் வந்தார்கள். எனவே மதீனா வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கடந்த காலங்கள் கனவுகளாகிப் போயின. கொடுமைகள் இல்லை சித்ரவதைகள் இல்லை கொலைச் சதிகளும் இல்லை. இப்பொழுது வாழ்க்கையை பூரண சுதந்திரத்துடன் வாழ ஆரம்பித்தார்கள் முஸ்லிம்கள். அதன் காரணமாக முற்றிலும் அரபகத்திற்கும் இன்னும் முழு உலகத்திற்கும் எடுத்துக் காட்டானதொரு சமூகத்தை ஒரு வாழ்க்கை அமைப்பை உருவாக்கிட ஆரம்பித்தார்கள்.

மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் கட்டப்பட்டு விட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்களும் கூட இந்தப் பணியில் கலந்து கொண்டு கட்டடப்பணிகளில் மக்களுடன் மக்களாக இருந்து வேலை செய்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூபாவிலிருந்து தினமும் மதீனாவிற்குச் சென்று இந்த கட்டடப்பணிகளில் பணியாற்றி விட்டு மீண்டும் கூபாவிற்குத் திரும்பி வரக் கூடியவராக இருந்தார். இந்தப் பணிகளுக்கிடையில் தங்களது வேலைப்பளுவை மறப்பதற்காக முஸ்லிம்கள் கீழ்க்கண்ட பாடலைப் பாடுபவர்களாக இருந்தார்கள் :

மறுஉலக வாழ்க்கையை விட இன்னொரு வாழ்க்கை இல்லை

இறைவா! (மக்கத்து) முஹாஜிர்கள் மீதும் (மதீனத்து)அன்ஸாரிகள் மீதும் கருணை பொழிவாயாக!

ஏற்கனவே நாம் சொன்னது போல முன்மாதிரி மிக்க சமுகத்தை உருவாக்க விளைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து வந்திருந்த முஹாஜிர்களுக்கு வாழ்வாதரத்தையும் இன்னும் மறுவாழ்வையும் அளிக்க விரும்பி மதீனாவின் அன்ஸாரி ஒருவருடன் மக்கத்து முஹாஜிர் ஒருவரை சகோதரராக இணைத்து விட்டு உலக மனித வரலாற்றில் சகோதரத்துவம் என்றால் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டானதொரு வாழ்க்கை முறையை வகுத்தளித்தார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இவர்களின் சகோதரத்துவம் உடன்பிறந்த சகோதரனின் மீது கொண்டு பாசத்தையும் வென்று நின்றது. இதனடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் இத்பான் பின் மாலிக் என்ற பனூ அல் கஜ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அன்ஸாரித் தோழருடன் இணைத்து விடப்பட்டார்கள்.

மக்காவின் தட்ப வெப்பம் வறட்சியானது மதீனாவிலோ அதிகப்படியான ஈரப்பதம் காணப்பட்டது. எனவே இந்த தட்ப வெப்ப மாற்றம் மதீனாவிற்கு வந்து குடியேறிய மக்கா வாசிகளைப் பாதிக்க ஆரம்பித்தது உடல்நலக் குறைவை ஏற்படுத்தியது. மக்காவிலிருந்து வந்த பலர் மதீனாவில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அல்லாஹ்வினுடைய கருணையினால் ஒருசிலர் மட்டும் எந்தவித அசௌகரியங்களுக்கும் ஆட்படாமல் மிகவும் உடல்நலத்துடன் இருந்தார்கள். அத்தகையவர்களுள் உமர் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் பூரண உடல் நலத்தை அளித்திருந்தான்.

மக்காவில் உமர் (ரலி) அவர்கள் ஒரு வியாபாரியாக இருந்தார்கள். ஹிஜ்ரத்திற்காக அவர் பயணப்பட்டு மதீனாவிற்கு வரும் பொழுதே தன்னுடன் தன்னுடைய பொருளாதாரத்தையும் கொண்டு வந்திருந்தார். எனவே அந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு மதினாவில் புதிதாக வியாபாரத்தைத் தொடங்க ஆரம்பித்தார்கள்.

கூபாவில் தனது தலைமையகத்தை வைத்துக் கொண்டு மதீனாவில் வியாபாரத்தை நடத்தி வந்த உமர் (ரலி) அவர்களின் வியாபாரம் மதீனாவில் மிகவும் அமோகமாக நடந்து வந்தது. தனது வியாபாரத்தில் செலவிட்ட நேரம் போக மீதமுள்ள நேரங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து தனது நேரத்தைச் செலவழிப்பவர்களாக இருந்தார்கள். முக்கியமான விஷயங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் ஆலோசனை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். இத்தகைய கலந்தாலோசனைகளின் பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களது மற்றும் உமர் (ரலி) அவர்களது கருத்துக்களில் வேறுபாடுகள் காணப்பட்டால் இரண்டையும் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டு தனது இறுதி முடிவை எடுக்கக் கூடியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். இரண்டு பேர்களுடைய கருத்துக்களும் ஒத்து இருந்தால் அதனை மாற்றுக் கருத்தில்லாமல் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.







இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் தனது ''கலீபாக்களின் வரலாறு"" என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள் :

அப்துர் ரஹ்மான் பின் கனம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய இருவரும் ஆலோசனையில் ஒத்த கருத்தைக் கொண்டிருப்பார்களேயானால் அவர்களது (கருத்தை) நான் மறுக்க மாட்டேன்.




 

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே