Sunday, July 13, 2014

இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரலி) வாழ்க்கை வரலாறு. - பாகம் - 1

Add caption
இரண்டாம் கலீஃபா உமர் பின்
---------------—-————-——-----
கத்தாப் (ரலி) வாழ்க்கை
-------------------------------
வரலாறு.
------------

பாகம் - 1
------------

இஸ்லாமிய வரலாற்றில் உமர் (ரலி) என்ற பெயருக்கு தனிச் சிறப்பு உண்டு. அவரது ஆரம்ப கால வாழ்க்கை அஞ்ஞானத்தில் ஆரம்பித்தாலும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் பின்பு அவர்களது வாழ்வு எந்தளவு தலைகீழ் மாற்றம் பெற்றது என்பது மட்டுமல்ல அவர்களின் தூய வாழ்வு இன்றைய முஸ்லிம்களும் இன்னும் இஸ்லாத்தை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட உமர் (ரலி) அவர்களது வாழ்வைப் பற்றியும் அவரது ஆட்சி முறைகளைப் பற்றியும் அறிந்து மனதார பாராட்டுகின்றார்கள். அத்தகைய உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கையை இன்ஷா அல்லாஹ் நாம் இனி தொடராகப் பார்ப்போம்.

ஆரம்ப கால வாழ்வு:
------------------------

உமர் (ரலி) அவர்களின் பிறந்த தேதி பற்றிய சரியான குறிப்புகள் இல்லை எனினும் சற்றேறக்குறைய கி.பி.580 ஆம் ஆண்டு பிறந்திருக்கக் கூடும் என்றும் இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட 10 வயது இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உமர் (ரலி) அவர்கள் மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான அதீ என்ற குலத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். உமர் பின் கத்தாப் பின் நுஃபைல் பின் அப்துல் உஸ்ஸா பின் ரிஸா பின் ரிபான் பின் குரத் பின் அதீ பின் கத்ப் என்ற பரம்பரைபியில் வந்தவராவார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒன்பதாவது பரம்பரையினரும் அபுபக்கர் (ரலி) அவர்களின் 8 வது பரம்பரையினரும் உமர் (ரலி) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அந்தளவு இவர்களுக்கிடையே தொப்புள் கொடி உறவு என்பது குறிப்பிடத்தக்கது.

உமர் (ரலி) அவர்களின் முன்னோர்களில் ஒருவரான அதீ என்ற கோத்திரத்தவர்கள் மக்காவில் குறைஷிகளிடையே எழக் கூடிய பிரச்னைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய மத்திஸ்தர்களாகவும் செயல்பட்டு வந்தார்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களுக்கும் ஹர்ப் பின் உமைய்யா அவர்களுக்கும் இடையே 'யார் கஃபாவை நிர்வகிப்பது என்ற பிரச்னை எழுந்த பொழுதுää அதனைத் தீர்த்து வைப்பதற்கு உமர் (ரலி) அவர்களுடைய பாட்டனாரான நுஃபைல் தான் மத்தியஸ்தராக இருந்து அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைத்தார். அப்துல் முத்தலிப் கஃபாவின் நிர்வாகியாக்கப்பட்டார். உமர் (ரலி) அவர்களுடைய தந்தையார் கத்தாப் அவர்கள் பனீ அதி குலத்தவர்களின் மிகவும் பிரபல்யமான நபராகத் திகழ்ந்தார். உமர்(ரலி) அவர்களுடைய வீடு ஸஃபா மற்றும் மர்வாவுக்கு இடையே அமைந்திருந்தது. உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது அந்த வீடு அகற்றப்பட்டு மக்கள் தங்கும் இடமாக மாற்றப்பட்டது.

உமர் (ரலி) அவர்களுடைய தாயார் கந்தமா அவர்கள் ஹிஸாம் பின் முகீரா என்பவருடைய மகளுமாவார். இந்த ஹிஸாம் பின் முகீரா பல தடவைகள் குறைஷிகளின் படைகளுக்கு தலைமை தாங்கிச் சென்றுள்ளார். இந்த தாய்வழிப் பாட்டனாரான ஹிஸாம் அவர்களும் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தந்தை வலீத் - ம் சகோதரர்களாவார்கள். எனவே இதன் மூலம் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் உமருடைய தாயாருக்கு மைத்துனர் முறையும் உமர் (ரலி) அவர்களுக்கு தாய் வழி சிறிய தந்தையாருமாவார்.

இஸ்லாத்தின் வைரியான அபூ ஜஹ்ல் என்ற அம்ர் பின் ஹிஸாம் அல் முகீரா - இவர் உமர்(ரலி) அவர்களுடைய தாயாருக்கு சகோதரராவார். எனவே இதன் மூலம் அபூ ஜஹ்ல் உமர் (ரலி) அவர்களுக்கு தாய் மாமன் உறவுடையவராகின்றார். உமர் (ரலி) அவர்களுடைய தாயாரின் ஒரு தங்கையை - அதாவது உம்மு ஸல்மா (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்திருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களுக்கு பல சகோதர சகோதரிகள் இருந்தனர். அவர்களில் மிகவும் சிறப்புடையவர்கள் : ஜைத் மற்றும் ஃபாத்திமா ஆகியோர்களாவார்கள். ஜைத் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் ஒரு தகப்பனாருக்கும் வெவ்வேறு தாய்க்கும் பிறந்த சகோதரர்களாவார்கள். இருப்பினும் அந்த மாறுபாடும் வேறுபாடும் அறியாத ஒருதாய் மக்களாகவே இருவரும் வளர்ந்தனர். அபுபக்கர் (ரலி) அவர்களுடைய ஆட்சியின் பொழுது நடந்த யமாமா போரில் ஜைத் (ரலி) அவர்கள் உயிர்த்தியாகியாக ஆனதன் பின்பு சகோதரனை இழந்த உமர் (ரலி) அவர்கள் கடுமையான மனவேதனைக்கு ஆளானார்கள். அதன் காரணமாக ''யமாமா பகுதியிலிருந்து வீசுகின்ற தென்றல் காற்றில் எனது சகோதரனின் சுகந்தத்தை உணர்கின்றேன்"" என்று அடிக்கடி கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுடன் பிறந்த சகோதரியாவார். இவர் ஸயீத் பின் ஜைத் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு மணமுடிக்கப்பட்டிருந்தார்கள். இவர் தான் உமர்(ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முக்கிய காரணகர்த்தாகவாக இருந்தார்.

உமர் (ரலி) அவர்களின் மைத்துனரான ஸயீத் (ரலி) அவர்கள் குறைஷிகளில் மிகவும் மதிக்கத்தக்க ஒருவராகத் திகழ்ந்தார். இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் மக்காவைத் தரிசிக்கும் முன்பிலிருந்தே இவரது தந்தையான ஜைத் அவர்கள் சிலை வணக்கத்தை வெறுத்தொதுக்கியவர் இன்னும் ஓரிறைக் கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர். இவர் சிறந்த புலவரும் கூட. அவரது பாடல் வரிகள் அவரது ஓரிறைக் கொள்கையை எடுத்தோதக் கூடியவையாக இருந்தன :

நான் ஒரு கடவுளை நம்புகின்றேன்

என்னால் ஆயிரம் கடவுள்களை நம்ப முடியாது.

லாத்தையும் உஸ்ஸாவையும் மறந்தவன் நான்

ஞானமுள்ள மற்றும் அறிவுள்ள மனிதன் இதனை விட வேறு எதனைச் செய்ய முடியும்....

ஸயீத் (ரலி) அவர்களின் தந்தையான ஜைத் அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பற்றி பேசியதன் காரணமாக உமர்(ரலி) அவர்களின் தந்தையான கத்தாப் அவர்கள் ஜைத் அவர்களைக் கொலை செய்து விட்டார்கள். இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பணிகள் ஆரம்பிக்கு முன்னமேயே கொலை செய்யப்பட்டு விட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை மக்காவில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த அந்த நாட்களில் தனது தந்தையைப் போலவே தானும் ஓரிறைக் கொள்கையை உடனே உவந்தெடுத்துக் கொண்டவர் தான் உமர் (ரலி) அவர்களின் மைத்துனரான ஸயீத் (ரலி) அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அறியாமைக் காலத்தில் உமர்
-----------------------------------
உமர் (ரலி) அவர்களது ஆரம்பகால வாழ்வு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. சாதாரண நடுத்தர குடும்பமாகத் தான் அவரது குடும்பம் இருந்தது. அவர் தனது இளமைப் பருவத்தை ஆடு ஒட்டகம் மேய்ப்பதில் கழித்தார். அந்த ஆரம்ப கால நாட்களில் தான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை உமர் (ரலி) அவர்கள் அடிக்கடி நினைவு கூறக் கூடியவராக இருந்தார். மக்காவின் புறவெளிப்பகுதியாகிய தஜ்னான் மக்காவை விட்டும் 10 மைல் தள்ளி இருந்தது. அங்கு கொண்டு போய்த் தான் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டு வருவார். களைப்புடன் உட்கார நேரும் பொழுது அவரது தந்தை சாட்டையால் உமரை அடித்து உட்கார விடாமல் கால்நடைகளை மேய்க்கச் சொல்வாராம். இந்த தஜ்னான் பகுதியைக் கடக்கும் பொழுதெல்லாம் இந்த சம்பவத்தை நினைவு கூறக் கூடியவராக உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

அன்றைக்கு நான் களைப்படைந்து உட்காரும் பொழுதெல்லாம் என்னை எனது தந்தையார் சாட்டையால் அடித்து எழுப்பி விடுவார். இப்பொழுது காலம் மாறி விட்டது. எனது இறைவனைத் தவிர வேறு யாரும் என்னைக் காப்பாற்றி விட முடியாது என்று கூறுவாராம்.

அன்றைய காலத்தில் கல்வியும் எழுத்தறிவும் மிகவும் அரிதானது. ஆனால் உமர்(ரலி) அவர்களோ எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்கள். அன்றைய மக்காவில் எழுதப்படிக்கத் தெரிந்த மக்கள் 17 நபர்களே இருந்தனர் அவர்களில் ஒருவராக உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். அன்றைய காலப்பிரிவை நோக்கும் பொழுது இதுவே ஒரு மிகப் பெரிய சாதனை தான்.

உமர் (ரலி) அவர்களுடைய தகப்பனார் ஒருவருடைய பரம்பரையைத் தொகுத்து வழங்குவதில் மிகவும் பிரசித்தி பெற்றவர். தந்தையாருடைய அந்த திறமையின் அடிப்படையில் தந்தையாரிடம் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இன்னும் குறைஷியர்களில் ஒவ்வொருவருடைய பரம்பரையையும் மிகவும் அறிந்தவராகத் திகழ்ந்தார். இன்னும் அரேபியாவின் வரலாற்றையும் அறிந்தவராகவும் திகழ்ந்தார்கள்.

கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவராகத் திகழ்ந்தார். வெறுங் காலுடன் பல மைல்கள் நடக்கக் கூடியவராகவும் சிறந்த மல்யுத்த வீரராகவும் திகழ்ந்தார். உகாஸ் சந்தையில் வருடா வருடம் திருவிழாவில் நடக்கும் மல்யுத்தப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு வெற்றிப் பரிசுகளையும் பெற்றுள்ளார். இதன் மூலம் மல்யுத்தத்தில் அவர் சிறப்புப் புலமையைப் பெற்றிருந்தார். நல்ல குதிரை ஏற்ற வீரர். எப்படிப்பட்ட குதிரையையும் அடக்கி அதனை லாவகமாக ஓட்டக் கூடியவர். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராகவும் திகழ்ந்தார்.

இன்னும் பிரச்னைகளில் சரியான தீர்வு சொல்லக் கூடிய மத்தியஸ்தராகவும் திகழ்ந்தார். பல சமயங்களில் குறைஷிகளின் சார்பாக பல கோத்திரத்தவர்களுடன் பேச்சுவார்த்தைக்காகப் பிரதிநிதியாகவும் சென்றுள்ளார்.

அவரைச் சுற்றியிருந்த பாலைப் பெருவெளியைப் போலவும் வறண்ட கற்பாறைக் குன்றுகளைப் போலவும் அவர் கடுமையானவராகவும் எதிரிக்கு எதிரியாகவும் நண்பனுக்கு நண்பனாகவும் திகழ்ந்த போதிலும் எதிரியிடம் கடுமையைக் காட்டக் கூடியவராக இருந்தார்.ஆனால் நல்ல இதயம் அவரிடம் காணப்பட்டது.

அவரது இளமைக் காலத்தில் வியாபார நிமித்தமாக சிரியா ஈராக் எமன் போன்ற பிரதேசங்களுக்குச் சென்ற அனுபவம் கொண்டவர். வெற்றிகரமான வியாபாரியாகவும் அதன் காரணமாக அதிக லாபங்களைக் கொண்டு வரக் கூடியவராகவும் திகழ்ந்தார். உமர் (ரலி) அவர்கள் மக்காவை விட்டுக் கிளம்பும் பொழுது குறைஷிகளில் இருந்த மிகப் பெரிய பணக்காரர்களில் அவரும் ஒருவராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உமர் (ரலி) அவர்களுக்கு மூன்று மனைவிமார்கள் இருந்தனர். முதலாவது மனைவியின் பெயர் கரீபா பின்த் அபீ உமைய்யா அல் மக்சூமி. இவர் உமர் (ரலி) அவர்களுடைய தாய் வழிச் சொந்தமுடையவர். இரண்டாவது மனைவியின் பெயர் ஜைனப் பின் மாஸியுன். இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆரம்ப காலத் தோழரான உதுமான் பின் மாஸியுன் (ரலி) அவர்களின் தங்கையாவார். இவருக்கு அப்துல்லா மற்றும் ஹஃப்ஸா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். மூன்றாவது மனைவியின் பெயர் மலைக்கா பின்த் ஜாருல் அல் குஸைய். இவர் உம்மு குல்தூம் என்றும் அழைக்கப்பட்டார்கள்.....







Ahmed Buhari

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே