Tuesday, July 8, 2014

சென்னை கட்டிட விபத்து பற்றிய கவிதை

நீர் நிரப்பிய
ஏரியை,
மண் கொண்டு
நீர் நிரப்பினீர்..
மனையென்று
பொய் பரப்பினீர்...
அழகான நீர்நிலை

தூர்த்து
அடுக்குமாடியா?
அடுக்குமா?
கட்டடம் சிதறியது
கண்ணாடியா....
பாதி கட்டிய
நிலையில்
ஆடியது மாடி.....
அம்-மாடி,
அப்பாவி தொழிலாளிகளின்
உயிரைக் களவாடியது..
அய்யகோ !! அம்மாடி!!
பலி எண்ணிக்கை
கூடியது,
படிப்பவர்
பார்ப்பவர் உள்ளங்கள்
வாடியது..
வீடு வாங்கும்-விற்கும்
மோகங்களில் ஒன்று
இன்று
சோகம் ஆகியிருக்கிறது..
வீட்டுப் பத்திரம்
பத்திரமாய்
இருக்கிறதா? இருக்கட்டும்..
வீடு பத்திரமாய்
இருக்கிறதா?
தெரியுமா நமக்கு?
கட்டி விற்கிறார்கள்
வீடு வட்டிக்கு ...
சென்னைக்கு அருகில்
ஒரு சிட்டி-க்கு..
தகுதிக்கு மீறிய
துட்டுக்கு..
கடனில் வீடுகள்
வாங்கப்படும் போது
வாங்கும் திறணும்
பார்க்கப்படுவதில்லை,
பூமி
தாங்கும் திறணும்
பார்க்கப்படுவதில்லை.
குண்டு வெடித்தபின்
பாதுகாப்பு,
குழந்தை இறந்தபின்
பள்ளி வண்டி
பரிசோதனை,
படகு மூழ்கிய பின்
உயிர்க்கவச உடை,
இந்த வரிசையில்
போரூர் விபத்தும்
சில தினங்களில்
நினைவை விட்டும்
போய்விடாது இருக்கட்டும்..
அரசு உடனே
உரிய செயலில் இறங்கட்டும்,
உரியவர்களின் உள்ளம்
இரங்கட்டும்!!

அதிரை என்.ஷஃபாத்

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே